Saturday, March 21, 2009

தேர்தல் நேரத்தில் பணப்புழக்கம் எங்கிருந்து துவங்குகிறது...?

வணக்கமுங்க,

மகிழ்ச்சியா இருக்கீங்களா..? வாழ்க வளமுடன்.

போன வாரம் பெங்களூருவில் இருந்து ஊருக்கு போனபோது, மாமா சொன்னாரு "எலக்சன் வருதுல்ல இனிமே பணப்புழக்கம் நல்லா இருக்கும்". என்னங்கடா இது பணப்புழக்கதிற்கும் தேர்தலுக்கும் அவ்வளவு தொடர்பா.....???

சரி, முன்னெல்லாம் சன் ம்யூசிக்கில் வரும் ஹேமா சின்ஹா கேள்வி கேட்டு, பதில் வேண்டி க்ளு குடுப்பாங்க ஞாபகம் இருக்கா....? அது மாதிரி ஒரு கேள்வி.

பணப்புழக்கம் எங்கிருந்து துவங்குகிறது...? குறிப்பாக தேர்தல் நேரத்தில்...?

தெரியலையா...?

இதோ க்ளூ...

1. இந்த இடம் தமிழ் நாட்டின் மூலை முடுக்குகெல்லாம் இருக்கிறது. மினி பஸ், மின்சாரம், சாக்கடை போன்ற அடிப்படை வசதியேதுமில்லாத சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் கூட உண்டு.

தெரியலையா...?

2. சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 50 பேர் அந்த இடத்திலேயே மரணித்தாலும், இரண்டே நாட்களில் மீண்டும் சகஜ நிலைக்குத்திரும்பி வழக்கம் போல் உற்சாகமாக செயல் படும் இடம் அது.

நல்லா யோசனை செய்தும் தெரியலையா...?

3. வழக்கமாக மாலை நேரங்களில் தான் கடைத்தெருக்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும், ஆனால் இங்கு அதிகாலை டீக்கடைகள் திறப்பதற்க்கு முன்பிருந்தே இருந்தே குடிமக்கள் காத்துக்கிடப்பார்கள்.

இன்னும் தெரியலையா...?

4. அந்த இடத்தோட பேர்ல முதல் எழுத்து "டா" கடைசி எழுத்து "மாக்".

இன்னும் தெரியலையா...? அட போங்க சார்... காமெடி பண்ணாதீங்க...!!!

இதனால நமக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வருது, ஆனா ஏழை வீட்டுக் குழந்தைகள் ஒரு வேளையாவது நல்லா சாப்பிடுதா, கிழிசல் இல்லாம ஆடை உடுத்துதா, பள்ளிக்கூடம் போகுதா....? இதெல்லாம் யாருக்கு வேணும். நமக்கு வேண்டியதெல்லாம் பணம், பதவி, புகழ், இதெல்லாம் இப்போ நமக்கு வெறியாக மாறிவருகிறது. இவையெல்லாம் வேணும்னா என்னவேனாலும் செய்ய தயாரா இருக்கோம்ங்கறது ரொம்பவே வெட்கமாக இருக்கு...என்னது வெட்கமா...???...யாருக்கு...??? யாருக்கோ..!!!

நமக்கென்ன கவலை...எங்கே இந்த தற்காலிகமான பணம், பதவி நம்மவிட்டுப் போய்டுமோங்கறது மட்டும் தானே. பொறுப்பில்லாத குடிகாரப்பாவிகள், பதர்கள் இங்கே இருக்கிற வரைக்கும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு, சுரண்டியெடுத்து கஜானாவை நிரப்புவது ஒன்று மட்டுமே நமது நோக்கம்.

ஆகவே எனதருமை குடிமக்களே, குடியும் குடித்தனமுமாக வாழிய பல்லாண்டு.

Friday, March 13, 2009

கண்டதும் காதல் வருமா...?

வணக்கமுங்க,

நல்லா இருக்கீங்களா..? வாழ்க வளமுடன்.

எனக்கு ரொம்ப நாளா ஒரு பெரிய சந்தேகம், கண்டதும் காதல் வருமா சார்...?

ஸ்கூல்ல இருந்தே எத்தனையோ பெண்ணுங்கள பாத்திருக்கேன், ஆனா கண்டதும் காதல் வருமா அப்டிங்கற சந்தேகம் மட்டும் இன்னும் தீரல. எத்தனையோ தமிழ் சினிமா பாத்துமா இந்த கண்டதும் காதல்ல நம்பிக்கை வரலைன்னு நண்பன் கேட்கிறான். அட போடா, தமிழ் சினிமா பாத்துதான் கண்டதும் காதலே வெரும் மாயைன்னே தெரிஞ்சுகிட்டேன் என்பது என் பதில்.

நீங்களே சொல்லுங்க பாஸூ, பஸ் ஸ்டாப்ல பாத்தவுடனே வருது, பஸ்ல டிக்கெட் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும், எடுக்க சில்லரை இல்லைன்னாலும் இந்த பாழாப்போன காதல் வருது, போஸ்ட் ஆப்பீஸ்ல ஸ்டாம்பு ஒட்டறதுக்குளே வருது, கர்ச்சீப்பை தவர விட்டாலும் வருது, துப்பட்டா பறந்தாலும் வருது, தெரியாம இடிச்சிகிட்டா வருது, தெரிஞ்சே இடிச்சாலும் வருது, லைப்ரரியில புக் எடுத்தா வருது, எடுத்த புக்கை தவறவிட்டா வருது, அட இவ்வளவு ஏன் சார்....கால் செருப்பு அறுந்து போனாலும் காதல் வருது சார்.

என்ன தான் செஞ்சாலும், கழுதை நமக்கு ஒரு மண்ணும் வர மாட்டேங்குதே.... நானே இந்த வயித்தெரிச்சல்ல இருக்கும் போதுதான் பசங்க போன் பண்ணி, என்ன மாப்ளே இன்னிக்கு சன்டே.... நாட் கோயிங் அவுட்....??? அப்டின்னு ஸ்டைலா கேள்வி கேக்கும் போதே தெரியும் பக்கிப்பய ஏதோ பிகரை கரெக்ட் பண்ணி...பிக்கப்பும் பண்ணி....எங்கேயா...ஒரு ஷப்பிங் மால்ல வெட்டியா சுத்திகிட்டு இருக்கு அப்படிங்கறது.

காதல், காதல்னா சும்மாவா...? உனக்குத்தான் காதலிக்க நேரமில்லைன்னாலும், காதலுக்கு மரியாதை வேண்டாமா...? என்பது நண்பர்கள் வாதம்.

கண்டதும் காதல்ங்கறது வெறும் டுபாக்கூர் என்பது என் எண்ணம்.....அதேப்படிங்க பாத்தவுடனே காதல் வருது...? காதல் ஒரு ஆழமான உணர்வு இல்லையா...? ஒருவருக்கொருவர் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய உறவு இல்லையா..? பாத்தவுடனே வருவது வெரும் உடல் கவர்ச்சி, அலைபாயும் மனசோட ஈர்ப்பு, அது வெரும் காமம் தானே தவிர...காதல் கிடையவேகிடையாது. முதலில் ஏற்படுகிற உடல்கவர்ச்சி வேண்டுமானால் பின்னால் காதலாக மலரக்கூடுமேயன்றி, கண்டதும் காதல் என்பது உலகில் இல்லை, இல்லவே இல்லை.

ஆகவே நண்பர்களே...!!! கண்டதும் வருவது காமம்......காதல் இல்லை.

அன்புடன்,
இமைசோரான்

Tuesday, March 3, 2009

இணையத்தில் அபிஷேகம்...!!!

வணக்கமுங்க,

எப்பவோ ரொம்ப நாளைக்கு முன்னாடி எழுதுனது, நானா இதை கவிதை அப்பிடின்னு சொல்லிக்குவேன்....ஆனா நண்பர்கள் யாரும் உடன்படுவது இல்லை.

நீங்களாவது படிச்சு சொல்லுங்க.......!!!

அவ்வைப் பாட்டி சொல்லித்தந்த
ஆத்திச்சூடி படிச்சது போய்,
அயல் நாட்டு மோகம் கொண்டு
ஆங்கிலத்தில் படிக்கின்றோம்.

ஆத்தா அரைச்சு வச்ச
மீன் கொழம்பு வசனை போய்,
பீட்ஸாவும் பர்கரையும்
அப்படியே விழுங்குகின்றோம்.

தபால்காரர் வருவாருன்னு
தவமிருந்த காலம் போய்,
இன்பாக்ஸில் வந்துசேரும்
ஈமெயிலுக்காய் காத்திருக்கின்றோம்.

அரசமரத்துக்கடியில குத்தவச்சு
அன்னாடம் கதை பேசிய காலம் போய்,
அரசாங்க பார்க்கு பெஞ்சில்
அமர்ந்து கொண்டு கதைக்கின்றோம்.

இயற்கையோடு இணைந்து
இன்பமாக வாழ்ந்தது போய்,
இயந்திரங்கள் துணையோடு
இறுதி நாட்கள் வாழுகின்றோம்.

இத்தனையும் மாறும்போது
இறைவா...!!! நீ மட்டும் விதிவிலக்கா,
இப்போதெல்லாம் உனக்கு
இணையத்தில் தான் அபிஷேகமே செய்கின்றோம்.
அன்புடன்,
இமைசோரான்