Saturday, October 16, 2010

மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி

மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி என்ற பெயரில் தமிழகத்தின் பல்வேறு நகர்களில் விநியோகிக்கப்படும் நோட்டீஸால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்றைய தமிழகம் என்ற தலைப்பிடப்பட்டுள்ள அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது...

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார், எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?. நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்? அவர் சிரித்தபடி சொன்னார், என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டு குடிமகன்!

என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்?

மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம்.

தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!

இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா? மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி! என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, July 20, 2010

தமிழக, மத்திய அரசுகளைக் கண்டித்து நாகர்கோவிலில் மீனவர்கள் முற்றுகைப் போராட்டம்

This is copied from http://www.thatstamil.com

நாகர்கோயில்: மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் கடலுக்குள் செல்லும் மீனவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டியும் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் நாகர்கோயில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கொட்டிய மழையின் நடுவில் குடைகளைக்கூட பிடிக்க மறுத்து மீனவர்கள் போராடினார்கள்.

இதில் தமிழர்களம் அமைப்பின் பொதுச் செயலாளர் அரிமாவளவன் கலந்து கொண்டு பேசுகையில்,

கடந்த காலங்களில் மீனவர்களை ஒடுக்குவதிலும் அவர்களின் போராட்டங்களை நசுக்குவதிலுமே மத்திய மாநில அரசுகள் முனைப்பு காட்டுகின்றனவேயொழிய அவர்களைப் பாதுகாப்பதிலும் உயர்த்துவதிலும் இழப்பீடுகள் அளிப்பதிலும் எள்ளளவும் கரிசனை கொள்வது கிடையாது.

1974 -ல் தி.மு.க. ஆட்சியின்போது பெருந்துறை மீனவர்களை ஒருவார காலமாக அடித்து உதைத்து ரத்தம் சிந்தச் சிந்த மீனவப் பெண்களை நிர்வாணமாகச் சுடுமணலில் நெடுநேரம் உட்கார வைத்த கொடுமை இந்த மண்ணில்தான் நடந்தது.

எம்.ஜி.ஆர். ஆட்சிகாலத்தில் மெரினா கடற்கரையை அழகுபடுத்துகிறோம் என்ற போர்வையில் கடற்கரைக் குப்பங்கள் வன்முறை வழியில் அகற்றப்பட்டன. மீனவர்கள் சிந்திய குருதியில் கடற்கரை நனைந்தது. ஆனால், எம்.ஜி.ஆர். மீனவ நண்பனாக திரைப்படத்தில் நடித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக ஜாங்கிட் தலைமையில் 26 வாகனங்களில் இரும்புத் தடிகளோடு தமிழகக் காவல்துறையினரை பெருமணல் கிராம மக்கள் மீது ஏவிவிட்டு பெண்டு பிள்ளைகளையும் போராடிய அத்தனைப் பேரையும் ஏன், ஒரு நொண்டிச் சிறுவனையும்கூட விட்டு வைக்காமல் அடித்துத் தள்ளி குருதி சிந்த வைத்தது செயலலிதா அரசு.

இந்தத் திராவிடங்களின் ஆட்சியில்தான், ராமேசுவரம் நாகப்பட்டிணம் உள்ளிட்ட கிழக்குக் கடலில் இதுவரை 534 தமிழக மீனவர்கள் சிங்கள இனவெறிக்குப் பலியாகியிருக்கிறார்கள். ஆனால் மத்திய மாநில அரசுகள் கொலைகாரச் சிங்கள அரசுக்குத்தான் இன்றுவரை முட்டுக் கொடுத்து வருகிறது. தமிழகத்தில் 50 லட்சம் மீனவர்கள் இருந்தும் அரசின் இந்த எடுத்தெறிந்த போக்கு நமக்குக் கடும் சினத்தையே உண்டு பண்ணுகிறது .

அகிம்சைப் போராட்டங்களையெல்லாம் காந்தி தேசம் இதுநாள்வரை காலிலிட்டுத்தான் மிதித்திருக்கிறது. அமைதி வழிப் போராட்டங்கள், மனுக்கொடுத்தல், உண்ணாநோன்பு போன்ற போராட்ட வடிவங்களை அரசு இன்று எட்டிக்கூட பார்ப்பதில்லை. அப் போராட்ட மொழி அரசுக்குப் புரிவதுமில்லை. ஆட்சியாளர்களின் செவிகளுக்கு எட்டுவதுமில்லை. இப்படிப் புறக்கணிப்பதன் மூலம் அரசே வன்முறை வழிகளுக்கு ஊக்கம் கொடுக்கிறது. இருப்பினும் நாம் பொறுமையோடு சனநாயக வழிமுறைகளையே முன்னெடுப்போம்! வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்குப் பொறுக்கி திராவிடக் கட்சிகளையும் இந்திய தேசியக் கட்சிகளையும் முற்றாகப் புறக்கணித்து மீனவத் தமிழர்களாய் நாம் எழுந்து நம் வலுவை மெய்ப்பிப்போம்.

அரசுக்குக் கோடி கோடியாய் அன்னியச் செலாவணி வருவாய் ஏற்படுத்தித் தரும் உழைக்கும் மக்களான தமிழக மீனவர்களின் போராட்டங்களுக்கும், கோரிக்கைகளுக்கும் செவி மடுக்காத தமிழக அரசை சனநாயக வழியில் தூக்கி எறிந்துவிட்டு புதிய சமுதாயம் படைப்போம் என்றார்.

பின்பு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் அனைத்துக் கோரிக்களையும் அரசின் பார்வைக்குக் கொண்டு செல்வதாக வாக்களித்தார்.