வாழ்க வளமுடன்.
சூப்பர் நட்சத்திர நடிகர் மாதிரி தான் இந்த பணமும். எப்போ வரும், எப்டி வரும், எங்கிருந்து வரும் அப்டிங்கறதெல்லாம் தெரியாது, ஆனா வரவேண்டிய தேர்தல் சமயத்தில கரெக்ட்டா வந்திரும். வேட்பாளர்களின் சுய ஒப்புதலே கோடிகளில் சொத்துவிபரம் சொல்லும் போது, உண்மையான சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என்பது நாமெல்லாம் யூகிக்க வேண்டிய போட்டி தான். கோடிகளும், கேடிகளும் இல்லாவிட்டால் இப்போதெல்லாம் தேர்தலில் போட்டி கூட போட முடியாது, பிறகு தானே வெற்றி, தோல்வி எல்லாம். பெரும் கட்சிகள் கூட, தனது வேட்பாளர்களை தேர்வு செய்வது, வெரும் பணபலம் ஒன்றை மட்டுமே வைத்துத்தான் என்பதுவும் மறுக்க முடியாத உண்மை.
கட்சியில் அடிப்படை உறுப்பினராகக் கூட இதுவரை இல்லாதவர்கள் கூட தன்னிடம் தண்ணீராக செலவு செய்ய பணம் இருந்தால் எந்த ஒரு கட்சியிலும் சீட் வங்குவது மிகவும் எளிது. கல்வித்தகுதி என்ன?, மக்களுக்காக சேவை செய்யும் மனப்பான்மை இருக்கிறதா?, நேர்மையானவரா?, நல்ல ஒழுக்கம் உடையவரா?, என்கிற கேள்விகளுக்கெல்லாம் இப்போது இடம் இல்லை. எவ்வளவு கோடிகளும், எத்தனை கேடிகளும் உங்களிடம் இருக்கிறது என்பது தான் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
பெரும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட இப்போதெல்லாம், நேர்மையானவர்களாக இருப்பதில்லை என்பது வெட்கித்தலை குனிய வேண்டிய ஒன்றாகும். குற்ற வழக்குகளில் தண்டனை பெற்று ஜாமீனில் வெளியில் இருப்பவர்களுக்கெல்லாம் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படும் போது தான் இவர்களின் சுய ரூபம் தெரிகிறது. தேசிய செய்தித் தொலைக்காட்சிகளின் நேரடி விவாதத்திற்கு வரும் போது மட்டும் என்னமோ பெரிய யோக்கியர்கள் போல் பேசும் அரசியல்வாதிகளைப் பார்க்கும் போது மிகவும் அருவருப்பான புழுபூச்சிகளைப் பார்ப்பது போல் தோன்றுகிறது.
பணம், பதவி, புகழ் இவை தவிற மக்களின் நலன் கருதியே நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்று வெரும் வாய்ப்பேச்சாக இல்லாமல், மனப்பூர்வமாகச் சொல்லும் அரசியல்வாதிகள் இந் நாட்டிலும் உண்டு என்பது நம்மால் கனவிலும் நினைக்கமுடியத ஒன்றாகும். ஏதோ இங்கொன்றும் அங்கொன்றும் அரிதாகக் காணக்கிடைப்பவர்களூம் கூட பண நயக்த்தின் முன்னால் எதுவும் செய்ய இயலாமல் தவிப்பது வேதனையானது,

பணம் இருந்தால் மட்டுமே அரசியலுக்கு வர முடியும் என்கிற கீழ்த்தரமான நிலையில் இருந்து நாம் மீண்டு வரும் வரை எத்தனை தலைவர்கள் வந்தாலும், எத்தனை தேர்தல்கள் வந்தாலும் சதாரண ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. இதையெல்லாம் பார்க்கும் போது, ஜன நாயகம் என்பது எட்டாக்கனியாகி விடுமோ என்கிற அச்சம் தான் மேலோங்கி நிற்கிறது
தேர்தல் காலத்தில் ஆகும் செலவுகள் அனைத்தையும் அரசாங்கமே செய்யும், வேட்பாளர்கள் யாரும் ஒரு பைசாகூட தங்கள் சொந்த பணத்தையோ, கட்சியின் பணத்தையோ செலவு செய்யக் கூடது என்கிற சட்டம் வரவேண்டும்.
பணம் தோற்று, ஜனம் வென்று வரும் நாள் என்று வருமோ....???
No comments:
Post a Comment